Archives: அக்டோபர் 2019

பாதங்களுக்கு, ஒரு நல்ல செய்தி

“சரித்திரத்தில் இதுவரை காணாத சுகத்தை தரும் காலுறைகள்,” என்ற விளம்பரத்தைப் பார்த்தபோது என் முகத்தில் சிரிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, பாதங்களுக்கு ஒரு நல்ல செய்தி, வீடற்றவர்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான தேவை காலுறைகள். எனவே ஒவ்வொரு ஜோடி காலுறை வாங்கும் போதும், மற்றொரு ஜோடி தேவையுள்ள ஒருவருக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் எனவும் அந்த விளம்பரதாரர் தெரிவித்தார்.

முப்பத்தெட்டு வருடமாய் நடக்க முடியாமலிருந்த ஒரு மனிதனை இயேசு குணமாக்கிய போது அவன் எவ்வாறு சிரித்திருப்பான் என்று நினைத்துப் பார் (யோவா. 5:2-8). அதே வேளையில் தேவாலயத்தின் அதிகாரிகளின் முகத்தில் தோன்றிய பார்வையை எண்ணிப் பார்த்தால், அவர்கள் யாருமே, நீண்ட நாட்களாக உதவியற்றிருந்த ஒரு மனிதனின் கால்களையும், இருதயத்தையும் குறித்து இயேசு கரிசனை கொண்டதைக் குறித்து நல்லெண்ணம் கொண்டதாகத் தெரியவில்லை. ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்ற அவர்களுடைய சட்டத்தை மீறியவர்களாக இயேசுவையும், அந்த மனிதனையும் குறித்து குற்றம் சாட்டினர் (வச. 9-10, 16-17). இயேசு, இரக்கத்தின் தேவையை உணர்ந்த இடத்தில், அவர்கள் சட்டத்தைப் பார்த்தனர். 

இது வரையில் அம்மனிதனுக்கு தன்னுடைய கால்களை சுகப்படுத்தியவர் யாரென்றே தெரியாது. பின்னர் தான் தன்னை சுகப்படுத்தியவர் இயேசு என்று தெரிந்து கொள்கின்றான் (வச. 13-15) அதே இயேசு தன்னுடைய பாதங்களை மரத்தில் அடிக்கப்பட ஒப்புக்கொடுத்தார். இதன் மூலம் அம்மனிதனுக்கும், நமக்கும், உடைந்த சரீரமும், உள்ளமும், இருதயமும் கொண்டவர்களுக்கும், சரித்திரத்தில் இதுவரை கேட்டிராத நல்ல செய்தியைத் தந்துள்ளார் .

 

அன்பின் விருந்து

“பெபட்டாவின் விருந்து” என்ற டேனிஷ் திரைப் படத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் அகதி, ஜெர்மனி தேசத்திலுள்ள ஒரு கடற்கரை கிராமத்திற்கு வருகின்றாள். அங்குள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தலைவர்களாகச் செயல்பட்ட இரு வயதான சகோதரிகளிடம் வந்து அடைக்கலம் புகுகின்றாள். பதினான்கு ஆண்டுகள், பெபட்டா அந்தச் சகோதரிகளின் வீட்டு வேலைகளை கவனிக்கின்றாள். இதன் மூலம் அவள் அதிகமான தொகையைச் சேகரித்து வைத்திருந்தாள். அவள், பிரான்ஸ் நாட்டினரின் உயர்தர உணவு விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி, அங்குள்ள சபை அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேரையும் அழைத்தாள்.

ஒரு வகை உணவிலிருந்து அடுத்ததிற்குச் செல்லும் இடைவெளியில், சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டனர், சிலர் மன்னிப்பை பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் இழந்த அன்பை திரும்ப பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் பெற்ற அற்புதங்களையும், சிறுவயதில் கற்றுக்கொண்ட உண்மைகளையும் பிறரோடு பகிர்ந்து கொண்டனர். “நாம் கற்றுக்கொண்டவைகளை நினைக்கின்றோமா?” என்று கேட்டுக் கொண்டனர். சிறு குழந்தைகள், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தனர். அந்த சாப்பாடு முடிந்த போது, பெபட்டா, அந்த சகோதரிகளிடம், தன்னுடைய சேமிப்பு அனைத்தையும் இந்த உணவிற்கு செலவழித்து விட்டதாகத் தெரிவித்தாள். அவள் எல்லாவற்றையும், மீண்டும், பாரீஸிசின் புகழ் பெற்ற சமையற்காரியாகும் வாய்ப்பையும் விட்டுக் கொடுத்தாள். அவளோடு உணவருந்திய நண்பர்களின் உள்ளத்தைத் திறக்க உதவினாள்.

இயேசு, இவ்வுலகிற்கு அந்நியராகவும், ஊழியம் செய்பவராகவும் வந்தார். நம்முடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்க, அவர் எல்லாவற்றையும் கொடுத்தார். இயேசு தன்னுடைய உபதேசத்தைக் கேட்பவர்களிடம், உங்கள் முன்னோர்கள் வனாந்திரத்தில் திரிந்த போது, தேவன் அவர்கள் புசிப்பதற்கு காடையையும், மன்னாவையும் புசிக்கக் கொடுத்தார் (யாத். 16). அந்த உணவு அவர்களுக்கு கொஞ்சக் காலம் மட்டுமே திருப்தியைக் கொடுத்தது. இயேசுவை “வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்” என்று ஏற்றுக் கொள்கிறவன் “என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா. 6:51). அவருடைய தியாகம் நம்முடைய ஆத்ம தாகத்தைத் தீர்க்கும்.

 

இரண்டாம் தரமல்ல

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது, அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன், உலகத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்த மனிதனாகப் பார்க்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு பேரதிர்ச்சி தரும் பக்கவாதம் அவரைத் தாக்கிய போது, அவருடைய மனைவி அனைத்து அலுவல்களையும் கவனித்தார். அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை எவை என்பதைத் தீர்மானித்தார். ஒரு சிறிய காலத்திற்கு அமெரிக்க அதிபராக அவருடைய மனைவி ஈடித் வில்சன் செயல் பட்டாரென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

ஆதி திருச்சபையின் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்படிச் சொன்னால், நாம் கொடுக்கும் வரிசையில் பேதுரு, பவுல், தீமோத்தேயு போன்றோர் இடம் பெறுவர். ஏனெனில் இவர்களின் திறமைகளைக் குறித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், ரோமர் 16ஆம் அதிகாரத்தில் பவுல் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த, கிட்டத்தட்ட நாற்பது பேரைக் குறிப்பிடுகின்றார். அதில் பெண்கள், ஆண்கள், அடிமைகள், யூதர்கள் மற்றும் புறஜாதியினர் அடங்குவர். இவர்களனைவரும் சபை வளர்ச்சியில் வெவ்வேறு வகைகளில் பங்களித்துள்ளனர்.

இவர்களை இரண்டாம் நிலை நபர்களாக பவுல் கருதவேயில்லை. அவர் இவர்களுக்கு உயர்ந்த மரியாதையைக் கொடுக்கின்றார் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் என இவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார் (வச. 7) இவர்கள் இயேசுவுக்காக செய்த பணியினிமித்தம் போற்றப்பட வேண்டியவர்கள்.

நம்மில் அநேகர் தங்களை சபையின் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்களாகக் கருதுவதுண்டு. ஆனால், உண்மையில் ,ஒவ்வொருவரிடமும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய திறமைகளுள்ளன.தேவனுடைய பெலத்தால், நம்முடைய திறமைகளை அவருடைய நாம மகிமைக்காக நாம் பயன்படுத்துவோம்.

 

இரும்பும் பட்டும்

கவிஞர் கார்ல் சான்ட்பெர்க், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி, “மனித குலத்தின் வரலாற்றில் இரும்பின் உறுதியையும், பட்டின் மென்மையையும் ஒருங்கே பெற்ற ஒரு மனிதன், இருதயத்திலும், மனதிலும் பயங்கரமான புயலையும், சொல்லமுடியாத அமைதியையும் ஒருங்கே பெற்றிருக்கின்றார்” என்றார். விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் தன் அரச அதிகாரத்தை லின்கன் சம நிலையில் பயன் படுத்தினார் என்பதை “இரும்பும் பட்டும்” என்பதால் விளக்குகின்றார். 

சரித்திரத்தில் ஒரேயொருமனிதன் தான் வலிமையையும், மென்மையையும் மற்றும் அதிகாரத்தையும் இரக்கத்தையும் சமமாக பயன்படுத்தினார். அவர் தான் இயேசு கிறிஸ்து. யோவான் 8 ஆம் அதிகாரத்தில், மதத்தலைவர்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கல்லெறிந்து கொல்லும்படி கொண்டு வந்த போது, இயேசு அவர்களிடம் வலிமையையும், மென்மையையும் காண்பித்தார். இரத்த வெறி கொண்ட ஒரு கூட்டத்தினரின் கோரிக்கையை வலிமையாக எதிர் நோக்கினார். குற்றம் கண்டு பிடிக்கும் அவர்களின் கண்களை, அவர்களுக்கு நேராகவே திருப்பினார். அவர் அந்த கூட்டத்தினரிடம், “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” (வச. 7) என்றார். பின்னர், இயேசு, தனது மென்மையான இரக்கத்தை அப்பெண்ணிடம் காட்டி, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனி பாவம் செய்யாதே” என்றார் (வச. 11).

இயேசு காட்டிய வலிமையையும், மென்மையையும் நாமும் பிறரிடம் காட்டும் போது தான், தேவன் நம்மையும் இயேசுவைப் போன்று மாற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்த முடியும். மென்மையான இரக்கத்தையும், வலிமையான நீதியையும் நாம் செயல் படுத்திக்காட்டும் போது தான் தேவனுடைய இருதயத்தை இவ்வுலகிற்கு காண்பிக்க முடியும்.